No icon

Asian Church News

கோவிட் அச்சுறுத்தலால் மியான்மரில்  கைதிகள் விடுதலை

மியான்மார் புத்தாண்டையொட்டியும், கோவிட்-19 தொற்று நோய் அச்சத்தினாலும், அந்நாட்டு சிறைகளிலிருந்து ஏறத்தாழ 25,000 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17ம் தேதி முதல், இத்திங்கள் ஏப்ரல் 20ம் தேதி வரை, நான்கு நாட்களாக மியான்மாரில் சிறப்பிக்கப்பட்ட புத்தாண்டையொட்டி, இவ்வளவு பெரிய அளவில், அதாவது, நாட்டின் மொத்தக் கைதிகளுள் நான்கில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்படுவதற்கு காரணம், சிறைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதும், கோவிட் அச்சுறுத்தலுமே என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தற்போது விடுவிக்கப்பட்டு வரும் சிறைக்கைதிகளுள், பல அரசியல் கைதிகளும் அடங்குவர்.

மனிதாபிமான அடிப்படையில் இவ்வாண்டு 24,896 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதாக மியான்மார் அரசுத்தலைவர்  வின் மையின்ட் (Win Myint) அவர்கள், அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, விடுவிக்கப்பட உள்ள கைதிகளில் உள்ள 87 வெளி நாட்டவர்களும், அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு வெளியேற்றப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் சிறைகள் நிரம்பி வழிவது ஆபத்தானது என்பதை காரணம்காட்டி, சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் அமைப்பும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தன.

மியான்மாரிலுள்ள 46 சிறைகள், மற்றும், 50 தண்டனை தொழில் முகாம்களில், 66,000 பேர் தங்கக்கூடிய வசதியிருக்க, தற்போது 92,000 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று UCA செய்தி கூறுகிறது. (UCAN )

Comment